பைக்கில் மோதிய தனியார் நிறுவன பஸ்... 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட உடல் - இறந்த 2 உயிர்கள்..
ஓசூர் அருகே, தனியார் நிறுவன பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த நிலையில், வாகனங்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்.
ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்துள்ள போடிச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குமார், அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் ஆகியோர், கெலமங்கலத்தில் இருந்து போடிச்சிப்பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில் அதிவேகமாக சென்ற தனியார் நிறுவன பேருந்து மோதியதில், குமார் பேருந்தின் அடியில் சிக்கி 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த கணேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், சம்பவ இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் வந்த தனியார் நிறுவன பேருந்துகளை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அடித்து நொறுக்கி, வாகனங்களை கீழே தள்ள முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.