மதுரை, ராணிப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரையின் அண்ணாநகர், ஆரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. லாஜாப்பேட்டை, சோளிங்கர், நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
திருப்பூரில் கனமழை பெய்த நிலையில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். எம்.எஸ் நகர், புதிய பேருந்து நிலையம், பிச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ராமகிருஷ்ணாபுரம், பச்சூர், கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.