அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மற்றும் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரியை, திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறி கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரத்தில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரை சோதனை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்தது பரபரப்பை மேலும் கூட்டியது. இதனிடையே, அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அத்துமீறி நுழைந்ததாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறையினர் புகார் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபு மற்றும் அங்கித் திவாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.