வாட்டி வதைக்கும் கடும் வறட்சி... தண்ணீரை விலை கொடுத்து வாங்கி மரங்களை காப்பாற்றும் நெல்லை விவசாயிகள்
நெல்லை மாவட்டத்தில் மிகவும் வறட்சியான பகுதியாக ராதாபுரம் தாலுகா இருந்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை குறைந்து நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு கிணற்று பாசனம் கை கொடுக்கவில்லை. ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் நீர் வராததால் தென்னை மரங்கள் உள்பட அனைத்து பயிர்களும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் மரத்தை காப்பாற்ற டிராக்டர்களில் தண்ணீரை பிடித்து வந்து ஊற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாள்தோறும் 700 ரூபாய் முதல் 1400 ரூபாய் வரை விலை கொடுத்து தண்ணீர் வாங்கி மரங்களை காப்பாற்றி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.