வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியை மோசடி செய்த வழக்கில், தனியார் வங்கி மேலாளருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
சென்னை, இந்திரா நகரில் செயல்பட்டு வரும் தனியார் வங்கி மேலாளரான பேட்ரிக் என்பவர், வாடிக்கையாளரின் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆண்டுதோறும் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து பார்க்கும் போது, இந்த மோசடி அம்பலமாகியிருக்கிறது. வெளிநாட்டில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களை குறிவைத்து, அவர்களது கணக்குகளில் உள்ள பணம் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியிருக்கிறது. வாடிக்கையாளர்களின் கையெழுத்தை போலியாக இட்டு அவர்களின் வைப்பு நிதி மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள தொகையையும் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றி திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு வங்கி மேலாளர் பேட்ரிக் ஆஜராகதால், அவருக்கு முதலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது ரெட் கார்னர் நோட்டிஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர்.