தமிழகம் வந்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமயிலான குழுவினர், தமிழ்நாடு , கர்நாடகா ,கேரளா மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழுவினர், சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, தேர்தல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்த தங்கள் கருத்துகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இரண்டாம் நாளான இன்று, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும், புதுச்சேரி மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவர் என தேர்தல் பணியுடன் தொடர்புடைய அனைத்து துறை அலுவலர்களுடன் அவர்கள் கலந்தாலோசனை நடத்த உள்ளனர்.