சென்னை மெரினாவில் 5 நாட்களாக.. கதறி நிற்கும் கோவை பெண்..."பக்கத்தில் மகன்..உயிரையும் விட முடியல"

Update: 2024-06-12 08:44 GMT

இப்படி..ஊர் விட்டு ஊர் வந்து உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த பெண்ணின் அவலநிலைக்கு வட்டியே காரணம்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த ரெஜினா, தனது கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். தனது பிள்ளைகளை அவரே கவனித்து கொள்ள வேண்டும் என்பதால், ரெஜினா லோடு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்..

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, வீடு கட்டுவதற்காக விஜயகுமார் என்பவரிடமிருந்து ஐந்து சதவீத வட்டிக்கு 2.50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார் ரெஜினா.

இதனைத் தொடர்ந்து மாதம் 12 ஆயிரத்து 500 ரூபாய் என 15 மாதங்களாக முறையாக கடனை கட்டி வந்துள்ளார்.

ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரெஜினா விபத்தில் சிக்கி காலில் அடிபட்டதாக கூறப்படுகிறது..

இதன் காரணமாக இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல், வட்டியும் கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார் ரெஜினா.

இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட கூறி விஜயகுமார் தொடர்ச்சியாக ரெஜினாவை மிரட்டியதாக, குற்றஞ்சாட்டுகிறார் ரெஜினா..

வீட்டிற்கு ஆள் அனுப்புவது, செல்போனில் மிரட்டுவது என தொடர்ந்து அச்சுறுத்தியதாக கூறும் ரெஜினா, தற்கொலை செய்து முடிவு செய்து சென்னைக்கு வந்ததாக கண்ணீர் வடிக்கிறார்..

ரெஜினா, பாதிக்கப்பட்ட பெண்

"மிரட்டும் நோக்கில் ஆண்கள் சிலரை அனுப்பினார்கள்"

"தற்கொலை எண்ணத்துடன் தான் இங்கு வந்தேன்"

தற்கொலை எண்ணத்துடன் சென்னை வந்த அவருக்கு, தன் மகனும் உடனிருந்ததால், தற்கொலை செய்ய மனமில்லாமலும், வாழ முடியாமலும் தவித்து வந்துள்ளார்.

திரும்பி தனது ஊருக்கு செல்லவும் அவருக்கு தைரியம் இல்லாததால், சென்னை வந்து சுமார் 5 நாட்களாக சென்னை மெரினா, சென்ட்ரல் ரயில் நிலையம் என மாறி மாறி தன் இருப்பிடத்தை மாற்றி வந்திருக்கிறார்..

ரெஜினாவின் நிலை குறித்து அறிந்த சமூக ஆர்வலர் சசிகுமார் என்பவர், ரெஜினாவிற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள நிலையில், அவரின் பரிதாப நிலையும், வட்டிக்கொடுமையின் கொடூரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சமூக ஆர்வலர் சசிகுமார் மூலம் கடன் கொடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மீண்டும் தன் ஊருக்கு செல்வதில் அச்சத்துடனேயே உள்ளார் ரெஜினா.

மேலும் வாங்கிய கடனை கட்டுவது தான் முறை எனக் கூறும் ரெஜினா, தன்னால் மொத்தமாக அசல் பணத்தை கொடுக்க முடியாது என்றாலும், கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுத்து விடுகிறேன் என கண்களில் கண்ணீருடன் பேசுவது பார்ப்போரை நிலை குலைய வைக்கிறது..

அசல் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்"

"என்னை தொல்லை பண்ணாமல் இருக்கணும்"

"வாங்கிய கடனை நான் அடைத்து விடுவேன்"

இதனையடுத்து ரெஜினா குறித்து தகவலறிந்த பட்டினம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரெஜினாவிடம் விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது ரெஜினாவின் பிரச்சினை மட்டுமின்றி கடன் என்ற மாயவலையில் சிக்கி கொள்வோர் பலருக்கும் இந்த சம்பவம் ஒரு பாடம்..

Tags:    

மேலும் செய்திகள்