"இறுதி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகள் மீறினால் உறவினர்கள் மீது நடவடிக்கை"
இறுதி ஊர்வலங்களின் போது சாலைகளில் மாலைகளை வீசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.சாலைகளில் வீசப்படும் மலர் மாலைகளால் ஏற்படும் விபத்துகள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக டி.ஜி.பி., காவல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இறுதி ஊர்வலம் என்பது மக்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். அதே நேரத்தில், பொதுமக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலை, பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலத்தை நடத்துவதை உறவினர்கள் தவிர்க்கவேண்டும், இந்த நிபந்தனைகளை மீறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.