சென்னை மேற்கு தாம்பரத்தில், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. பீமேஸ்வரன் கோயில் தெரு, திருவேங்கடம் தெரு சந்திப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண், விலை உயர்ந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வருகிறார். அந்த வளர்ப்பு நாயை அவர் சங்கிலி கட்டாமல், தெருவில் உலாவ விடுவதால், அது, தெருவில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்கப் பாய்கிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனே அந்த தெருவை கடந்து செல்கிறார்கள். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, நாயின் உரிமையாளர், அலட்சியமாக பதில் அளிப்பதாக கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...