சென்னையில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் சிவில் இன்ஜினியரின் பகீர் வாக்குமூலம் அடுத்த மாதம் கல்யாணம் அதற்குள் வைத்த டார்கெட்

Update: 2024-05-31 10:13 GMT

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த சிவில் இன்ஜினியர், கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிக்கும் தொழிலில் இறங்கியது எப்படி? என்பதை இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சென்னை சேலையூரை அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்ற மூதாட்டியிடம், சில நாட்களுக்கு முன்பு 2 சவரன் தங்க செயினை மர்ம நபர் பறித்துக்கொண்டு சிட்டாக பறந்தார். இதே போன்று, கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் தனியாக சென்ற நித்திய சுபா என்பவரிடமும் 5 பவுன் நகையை பறித்துள்ளார். செயினை பறித்துவிட்டு தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானதால், தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் தனியாக நடந்து செல்லவே பெண்கள் அச்சமடைந்தனர்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் பறந்த இளைஞர், காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை வழியாக சென்று, இறுதியாக மடிப்பாக்கம் ராம்நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றதை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாயின. கோவில்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம். குடும்பத்தோடு மடிப்பாக்கம், ராம் நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியரான அவர், ஆன்லைன் வர்த்தகத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த‌தோடு, தனது தங்கையின் 10 சவரன் நகையை அடகு வைத்து, அந்த பணம் என, மொத்தமாக 15 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். பின்னர், ரேபிடோவில் பைக் ஓட்டி வந்த நிலையில், தனது ஜாதகத்தை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்த போது, செயின் பறிப்பு குறித்த வீடியோக்களை யூடியூபில் பார்த்துள்ளார். அதே போன்று செயின்களை பறித்து, கடன்களை அடைக்க திட்டமிட்ட அருணாச்சலம், சீதாலட்சுமி மற்றும் நித்திய சுபாவிடம் செயின்களை பறித்துள்ளார்.

செயின் பறிப்பில் கிடைத்த 5 சவரன் நகையை தனது தங்கையின் திருமணத்திற்காக கொடுத்துவிட்டு, மீதமுள்ள 2 சவரன் நகையை, தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றுள்ளார். வரும் 10ஆம் தேதி அருணாச்சலத்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், சிசிடிவி காட்சியால் போலீசில் அகப்பட்டுள்ளார். ரேபிடோவில் இருசக்கர வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வந்த சிவில் இன்ஜினியர், ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்து கடனாளியாகி, கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்தோடு, தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்