குழந்தைகள் கடத்தலென சென்னை எல்லையில் வெடித்த பூகம்பம்.. தாயே ஆள் வைத்து கடத்திய அதிர்ச்சி

Update: 2024-07-09 17:44 GMT

செங்கல்பட்டு மவட்டம் ஓழலூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப்பள்ளியில் அரங்கேறிய இந்த சம்பவம் நேற்றிரவு தமிழகத்தையே பதற வைத்திருந்தது...

பள்ளி மாணவர்கள் இருவரை... பள்ளியின் மதிய உணவு இடைவெளியின் போது இருவர் கடத்திச் சென்றதால் வெடித்த பரபரப்பே இது...

பள்ளியில் பயின்று வரும் அக்கா, தம்பியான இரு மாணவர்களை, அவர்களின் உறவினர்கள் எனக்கூறி கணவன் - மனைவி போல் இருவர் பார்க்க வந்திருக்கின்றனர்...

பள்ளி தலைமையாசிரியரான எழிலரசி இருவரையும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் அழைத்துச் சென்று இவர்களை உங்களுக்கு தெரியுமா? எனக் கேட்ட நிலையில், மாணவர்கள் இருவரும் தங்களுக்கு யாரென்றே தெரியாது எனக்கூறி இருக்கிறார்கள்...

இதனிடையே, எழிலரசிக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்ததாக தெரிகிறது... இதனால் அவரின் கவனம் சிதறவே... இதற்கு நடுவில் யாருக்கோ போன் செய்து மாணவர்களிடம் பேச வைத்த இருவரும், மாணவர்களை நொடிப்பொழுதில் பள்ளியில் இருந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள்...

சம்பவ இடத்தில் மாணவர்களையும், தம்பதி போல் நின்று கொண்டிருந்த இருவரையும் காணாததை கண்டு தலைமையாசிரியர் எழிலரசிக்கு வியர்த்து கொட்டிருக்கிறது...

உடனே, சம்பவம் குறித்து போலீசாருக்கும் அவரின் தந்தைக்கும் போன் மூலம் எழிலரசி தகவல் தெரிவித்த நிலையில், வந்து விழுந்தது அடுத்த அதிர்ச்சி...

மாயமான இரு மாணவர்களின் பெற்றோரும்... கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்ததாகவும்... இதில் மாணவர்களின் தாயார் வேறோருவருடன் குடும்ப நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது...

இதில், ஏற்பட்ட தகராறு காவல்நிலையம் வரை சென்று.. தன் குழந்தைகளுக்கும் அவரின் தாயாருக்கும் எந்த சம்பந்தமில்லை என மாணவர்களின் தந்தை எழுதி வாங்கியதாகவும்... இதனை பள்ளியில் தெரிவித்தே தன் குழந்தைகளை அவர் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது..

ஆட்டோ ஓட்டுநரான அவர்... தன்னைத் தவிர, என் குழந்தைகளுக்கு தாய் எனக்கூறி யார் வந்தாலும் குழந்தையை அனுப்ப கூடாது என பள்ளியின் தலைமைக்கு அறிவுறுத்தியும் வந்திருக்கிறார்...

இந்நிலையில்தான் இந்த கடத்தல் சம்பவம்..

தகவல் அறிந்து, சக ஆட்டோ ஓட்டுநர்களுடன் மாணவர்களின் தந்தை பள்ளிக்கு விரைந்த நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் எழிலரசியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தான் இந்த பரபரப்பு..

உடனே, 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், மாணவர்களின் தாய் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பானவாரம் பகுதியில் இருப்பதை அவரின் செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்...

உடனே, அங்கு விரைந்த போலிசார், மாயமான மாணவர்கள் இருவரும் அவரின் தாயாருடன் இருப்பதை கண்ட நிலையில், இருவரையும் பாதுகாப்பாக மீட்டிருக்கின்றனர்..

தன் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற ஆவலில்... தன் ஆண் நண்பரான கோகுல் என்பவர் மூலம் மாணவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து அப்பெண் கடத்தி வந்தது தெரியவந்திருக்கிறது..

இந்நிலையில், கோகுலையும், அவரின் நண்பர் சரவணன் என்பவரையும் கைது செய்திருக்கும் போலீசார், இந்த விவகாரம் குழந்தைகளை உரிமை கொண்டாடும் பிரச்சினை என்பதால் மீட்கப்பட்ட மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் குழந்தைகள் நல குழுமம் முன்பு ஆஜர்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.... 

Tags:    

மேலும் செய்திகள்