மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்படி, அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடி உள்ள நிலையில், உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய், நீர்வளம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், பொதுமக்கள் யாரும் காவிரி கரையோரங்களில் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.