செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

Update: 2023-10-05 17:20 GMT

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில்பாலாஜி உள்ளிட்ட 46 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரித்து, செப்டம்பர் 30-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் குறித்து, மத்திய குற்றபிரிவு காவல்துறையிடம், சில விளக்கங்களைக் கேட்ட நீதிபதி, இதுசம்பந்தமாக பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்