திருமங்கலத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய இடைக்காலத் தடை விதிக்க கோரியும், ஏற்கனவே பிறப்பித்த அரசாணை அடிப்படையில் வேங்கட சமுத்திரத்தில் புதிய பேருந்து நிலையத்தை கட்ட உத்தரவிடக் கோரியும் ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, வேங்கடசமுத்திரத்தில் பேருந்து நிலையம் அமைக்க போதுமான வசதிகள் இல்லை என்ற ஆய்வறிக்கை தகவலை சுட்டிகாட்டினார். மேலும், திருமங்கலம் பேருந்து நிலைய கட்டிடம் நல்ல நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிப்பதால், அதை இடிப்பது தொடர்பான உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். எனினும், தற்போதைய நெரிசல், எதிர்கால தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையத்தை அமைப்பது குறித்து 3 மாதங்களில் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.