அரசுக்கு எதிராக மாணவர்கள் திரும்பினால் அந்த நாடு எப்படி இருக்கும்? இதோ சாட்சி

Update: 2024-07-20 06:47 GMT

அரசுக்கு எதிராக மாணவர்கள் திரும்பினால்

அந்த நாடு எப்படி இருக்கும்? இதோ சாட்சி

மொத்த நாடும் ஸ்தம்பித்து கிடக்கும் காட்சி

வன்முறையில் பற்றி எரியும் வங்காளதேசத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

எங்கு திரும்பினாலும் மாணவர்கள் கையில் கம்பு... கற்களோடு செல்ல அவர்களை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது வங்கதேச ராணுவம்... ஆக்ரோஷம் கொப்பளிக்கும் மாணவர்கள் கோஷம்... அரசாங்க வேலையில் இட ஒதுகீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதே...

வங்கதேசத்தில் 1971-ல் பாகிஸ்தான் உடனான சுதந்திர போரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2018-ல் மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷேக் ஹசீனா இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த அந்நாட்டு உயர்நீதிமன்றம் மீண்டும் இட ஒதுகீட்டை அமல்படுத்த உத்தரவிட்டது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவு நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

போராட்டம் நடத்திய மாணவர்களை சந்திக்க மறுத்து விட்டார் பிரதமர் ஷேக் ஹசீனா.. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு எதிராக ஹசீனா கட்சியினரும் களமிறங்க பல இடங்களில் மோதல் வெடித்தது.

இதில் உயிரிழப்புகள் பதிவாகியபோது, புதன் கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஷேக் ஹசீனா... மாணவர்கள் அமைதி காக்க வேண்டும், நீதித்துறை வாயிலாக உரிய நியாயம் கிடைக்கும் என்றார்.

இதனையடுத்து போராட்டம் வலுவடைய, ஷேக் ஹசீனா உரையை ஒளிபரப்பிய அரசு தொலைக்காட்சி நிலையத்தில் தாக்குதல் நடத்தினர் மாணவர்கள்... கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. ஒளிபரப்பு நின்றது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக போராடும் மாணவர்கள், இந்த இட ஒதுக்கீடு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினருக்கு நன்மையளிக்கிறது என்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 3,000 அரசு வேலைக்கு 4 லட்சம் பட்டதாரிகள் தேர்வெழுதும் சூழல் நிலவுகிறது. இப்போது இடஒதுக்கீட்டால் கிடைக்கிற வேலையும் கிடைக்காது என்பது மாணவர்கள் கவலையாக இருக்கிறது.

(இந்த தாக்குதல்களை எல்லாம் அரசாங்கத்தால் எப்படி நடத்த முடிகிறது என்பதைதான் நாங்க கேட்கோம்... மாணவர்கள் பொதுவானவர்கள்... ஆரம்பத்தல இருந்து இததான் சொல்லுகிறோம். 50 சதவீதத்திற்கும் அதிகமான வேலையை கோட்டா வைச்சிருப்பவங்களுக்கே கொடுத்துவிட முடியாது ஒரு பொவான அறிவுதான்...)

மறுபுறம் எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியே வன்முறையை தூண்டியிருப்பதாக ஷேக் ஹசீனா கட்சி குற்றம் சாட்டுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கைதும் அங்கு தொடர்கிறது.

மோதல்... வன்முறைகள் அதிகரிக்க போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தியது வங்கதேச அரசு. இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. கல்வி நிலையங்கள் எல்லாம் காலவரையின்று மூடப்பட்டது.

ரயில்... சாலை போக்குவரத்து என எதுவும் இயங்காது ஸ்தம்பித்திருக்கிறது வங்கதேசம்... வன்முறை மற்றும் போலீஸ் பதிலடியில் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. சிறைக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், கைதிகளை விடுவித்திருக்கிறார்கள்... மாணவர்கள் போராட்டம் ஓயாது பதற்றமான சூழலே நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்