இந்த குழந்தைகளுக்கு விடிவு எப்போது?இவர்கள் கண்ணீரை யார் துடைப்பது?-"எங்களுக்கு படிக்க ஆசையா இருக்கு"

Update: 2024-07-08 08:25 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி செல்ல பாதை இல்லாததால் ஆபத்தான காட்டுப்பகுதியில் தினம் தினம் உயிரைப் பணயம் வைத்து பள்ளி செல்லும் 3 பிள்ளைகளின் துயரத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

பெரியவர்களே தனியே செல்ல பயப்படும் இந்த ஒற்றையடிப் பாதையில் ஒன்றுமறியா பிஞ்சுகள் காலையும் மாலையும் தன்னந்தனியே நடந்து பள்ளிக்கு சென்று திரும்புவதெல்லாம் எவ்வளவு பெரிய கொடுமை?...

அரியலூர் மாவட்டம்... மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழ புரத்தின் அருகே அமைந்துள்ளது இந்த மாளிகை மேடு சிற்றூர்...

வரலாற்று புகழ்மிக்க இந்த மாளிகை மேட்டில் ஓட்டு வீட்டில் தங்கள் 3 பிள்ளைகளுடன் வசித்து வருபவர்கள் தான் இந்த பாலசுப்பிரமணியன்-கௌசல்யா தம்பதி...

அகழாய்வு அருங்காட்சியகத்தின் பின்பகுதியில் 5 தலைமுறைகளாக இவர்கள் வசித்து வருகின்றனர்...

பெற்றோருக்குக் கூலி வேலை... தினமும் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் அடுப்பெரியும்...

கௌசிகா...ரிஷிநாத்...முகுனஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளும் அருகில் உள்ள உட்கோட்டை அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்...

படிப்பது கூட எளிது...ஆனால் இக்குழந்தைகள் பள்ளி செல்வது எவ்வளவு கடினம் தெரியுமா?...

பள்ளி செல்ல 500 மீட்டர் தூரத்திற்கு பொதுப் பாதை தான் வழி இவர்களுக்கு... கள்ளிச் செடிகள்...முட்புதர்கள்...பாம்புகள்...நிறைந்த இந்தப் பாதையை இக்குழந்தைகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடக்க வேண்டிய சூழல்... பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் துணைக்குக் கூட ஆள் இல்லை...

விழுந்து புரண்டு ஒரு வழியாக பள்ளி சென்று சேர்ந்தாலும் தாமதமாகி விடுவதால் ஆசிரியர்களிடமும் திட்டு வாங்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர் குழந்தைகள்...

இந்தப் பாதையை விட்டால் பக்கத்தில் உள்ள தைல மரத் தோப்பு அல்லது மாந்தோப்பு வழியே செல்லலாம்...ஆனால் நெடுந்தொலைவு...

தொலைவைக் கூட விட்டு விடுங்கள்...நடந்து செல்லும்போது நில உரிமையாளர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்ட...பயந்து போகின்றனர் குழந்தைகள்...

தங்கள் பிள்ளைகளுக்காக பாலசுப்பிரமணியனும்-கௌசல்யாவும் சேர்ந்து பொதுப் பாதையை சீரமைக்க முற்பட்டால் விவசாய நில உரிமையாளர்கள் அவர்களுக்குக் கொலை மிரட்டலே விடுக்கின்றனராம்...

கால் கடுக்க நடந்து சென்று எல்லா அலுவலகங்களிலும் புகாரளித்தும் எந்த அதிகாரியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் பெரும் வேதனை...

உயிரைப் பணயம் வைத்து பள்ளி செல்லும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்புவார்களா? என பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழல்...

பொதுப் பாதை சீரமைக்கப்படுமா என ஏக்கத்துடனும் கண்ணீருடனும் காத்துக் கொண்டிருக்கும் இந்தக் குழந்தைகளுக்கு அரசுதான் கருணை காட்ட வேண்டும்...

Tags:    

மேலும் செய்திகள்