சென்னை மாநகருக்கான வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் இயல்புநிலை இன்னும் திரும்பவில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் மழை, வெள்ளத்தை தடுக்க திருப்புகழ் குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்த பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வெள்ளத்தடுப்புத் திட்டங்கள், வெள்ளத் தணிப்பு நடவடிக்கை குறித்த திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருப்புகழ் குழுவில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விவர அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.