வேலூர் கோட்டையில், மதுபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர், தன்னை பிடிக்க வந்த காவலர்களை கண்ணாடி துண்டுகளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுற்றுலாத் தளமான வேலூர் கோட்டையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளாமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அங்கு 10 அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, மதுபோதையில் இருந்த நபர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்போன் பறித்து தப்பியோடியவரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், அவர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்த முபராக் என்பதும், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், கோட்டை சுற்றுசாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் முபராக்கை போலீசார் சுற்றி வளைத்த போது, காவலர்கள் தமிழரசு மற்றும் பாலாஜியை முபராக் கண்ணாடி துண்டுகளால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, முபராக்கை கைது செய்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.