திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு : நீதிபதி அபராதம் விதித்து உத்தரவு
கோயில் விழாக்களில், ஆடல்பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி, அபராதம் விதித்து முடித்து வைத்தார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், குலமங்கலம் காளியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி, 5, 6ஆம் தேதிகளில் கரகாட்டம், இன்னிசை நிகழ்ச்சிக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி, அதன்படி நிகழ்ச்சிகளை நடத்தக் கூறினார்.
மாலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்திய நீதிபதி, ஆபாசம் தவிர்த்தல் உள்ளிட்ட முந்தைய உத்தரவுகளை அறியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியதுடன், மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டார். இதேபோல், மதுரை கண்ணன், திருச்சி மாதவன், திண்டுக்கல் மனோகர் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், தேனி சுப்பையனுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.