ஜல்லிக்கட்டில் தடம் பதித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை - உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் முத்திரை பதித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன் காளை உயிரிழந்தது.

Update: 2021-10-13 09:17 GMT
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த அதிமுகவை சேர்ந்த விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு ஆர்வலரும் கூட. இவர் வளர்த்து வரும்  ஜல்லிக்கட்டுக் காளைகள், களத்தில் வீரர்களை திணறடித்து வெற்றி வாகை சூடும் என்பதால், பிரபலமானது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற இவரின் கொம்பன் காளை, களத்தில் நுழைவதற்கு முன்னதாகவே, வாடிவாசல் பக்கவாட்டு தூணில், தலை மோதியதால் துரதிஷ்டவசமாக அங்கேயே உயிரிழந்தது.


தொடர்ந்து நான்குக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை இவர் வளர்த்து வந்த நிலையில், அதில் ஒன்றான, வெள்ளைக் கொம்பன் காளை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று மாடுபிடி வீரர்களை திணறடித்து பல்வேறு பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக விஜயபாஸ்கரின் சொந்த கிராமமான ராப்பூசல்-இல் வெள்ளைக் கொம்பன் காளை உயிரிழந்தது.

காளை உயிரிழந்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், வெள்ளைக் கொம்பன் காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

தனது வெள்ளைக் கொம்பன் காளை பற்றிய நினைவலைகளை உருக்கத்துடன் பகிர்ந்துகொண்டார் முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கர்.

Tags:    

மேலும் செய்திகள்