2016-ம் ஆண்டு வாங்கப்பட்ட ஹெலிகாப்டர்;2019-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படவில்லை - ஹெலிகாப்டரை ஆம்புலன்சாக மாற்ற திட்டம்
அரசுக்கு சொந்தமான பயணிகள் ஹெலிகாப்டரை ஏர்-ஆம்புலன்சாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.
அரசுக்கு சொந்தமான பயணிகள் ஹெலிகாப்டரை ஏர்-ஆம்புலன்சாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அரசுக்கு 21 கோடியே 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பெல் 412 இ.பி. ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட 14 இருக்கைகள் கொண்ட இந்த ஹெலிகாப்டர் பேரிடர் காலங்களில் அவசர பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. வானில் 2 ஆயிரத்து 449 மணி நேரங்கள் பறந்திருக்கும் இந்த ஹெலிகாப்டர், 2019 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை நிறுத்துவதற்காக வாடகை, உதிரி பாகங்கள் மாற்றம், தேய்மானம், பராமரிப்பு செலவு என அரசு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலவு வைப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த ஹெலிகாப்டரை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் ஏர்-ஆம்புலன்சாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதற்கான சாத்திய கூறுகளை ஆராய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கான வசதி, பிற கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து அதிகாரிகள், தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.முன்னதாக கடந்த மே மாதம் இந்திய கடற்படையில் உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகுரக எம்.கே. 3 ரக ஹெலிகாப்டர் ஏர்-ஆம்புலன்சாக மாற்றப்பட்டது.அப்போது ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் இருக்கும் அத்தனை வசதிகளையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் கட்டமைத்தது.ஹெலிகாப்டரில் மல்டிபாரா மானிட்டர்கள், வென்டிலேட்டர், பொருத்தப்பட்டதுடன் ஆக்சிஜன் வசதி, அவசர சிகிச்சை மருந்துகள் உள்ளிட்ட பிற மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. தமிழகத்தில் தனியார் மருத்துவமனை தரப்பில் 2017 ஆம் ஆண்டே ஏர்-ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அரசும் உலக தரத்தில் ஏர்-ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.