சிக்கிய 7 பேர்... சிக்கலில் 10 நிறுவனங்கள் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் பின்னால் நடந்தது என்ன?
தன் அண்ணன் பெயரில் எராளமான அரசு ஒப்பந்தங்கள், உறவினர்கள் நடத்தி வந்த நிறுவனங்களின் வருமானம் அளவுக்கதிகமாக உயர்ந்தது என பெரும் முறைகேடு புகாரில் சிக்கியிருக்கிறார் முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி....
தமிழகத்தையே அதிர வைத்த இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் பின்னால் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்....உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கினார் என 2018ல் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கமும் புகார் அளித்தன. ஆனால் ஆளுங்கட்சியாக அதிமுக இருந்ததால் இந்த வழக்கு அப்போது கிடப்பில் போடப்பட்டது. இந்த சூழலில் இந்த பிரச்சினை திடீரென விஸ்வரூம் எடுத்து கிளம்பியதை தொடர்ந்து சென்னை, கோவை, திண்டுக்கல் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வேலுமணியின் சகோதரர் அன்பரசன், பங்குதாரர்களாக சந்திர பிரகாஷ், சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு சொந்தமான 10 நிறுவனங்கள் மற்றும் வேலுமணி உட்பட 7 பேர் என மொத்தம் 17 என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்...இதில் வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு செந்தில் அண்ட் கோ என்ற கட்டுமான நிறுவனமும், மகா கணபதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையும் உள்ளது. இதில் செந்தில் அண்ட் கோவின் வருமானமானது 7 ஆண்டுகளில் 112 சதவீதம் உயர்ந்திருப்பது தெரியவந்தது.
இந்த நிறுவனங்களில் வேலுமணியின் தம்பியான செந்திலும் பங்குதாரராக இருந்துள்ளார். நெதர்லாந்தில் வசித்து வரும் அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பாக கோவை திரும்பிய நிலையில் அவரின் வீட்டிலும் சோதனை நடந்தது. இதேபோல் கோவை மாநகராட்சியில் 47 டெண்டர்களை எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த டெண்டர்கள் அனைத்துமே ஒரே செல்போன் இணைப்பு மூலமாகவும் ஒரே இணையதள இணைப்பு மூலமாகவும் கோரியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... வேலுமணியின் தொழில் பங்குதாரரான சந்திரபிரகாஷ் மீதும் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமாக வர்தன் இன்ப்ராஸ்ட்ரக்சர், மெட்ராஸ் இன்ப்ரா, ஒசூர் பில்டர்ஸ், ஆலயம் பவுண்டேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் ஆலயம் பவுண்டேஷனின் வருமானமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கிறுகிறுக்க வைத்தது. காரணம் 2012 -13ல் 55 லட்சமாக இருந்த இந்த நிறுவனத்தின் வருமானமானது, 2018-19ல் 15 கோடியே 5 லட்சமாகி இருக்கிறது.
இதேபோல் வேலுமணியின் பங்குதாரரும், அதிமுக நிர்வாகியான சந்திரசேகருக்கு சொந்தமாக ஏஆர் இஎஸ் பிஇ இன்ப்ரா நிறுவனம், சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன், கட்சியின் நாளிதழ் உள்ளிட்டவை உள்ளன.
சந்திரபிரகாஷ் மற்றும் சந்திரசேகர் என 2 பேரும் சேர்ந்து தொழில் பங்குதாரர்களாக இணைந்து பல நிறுவனங்களை நடத்தி உள்ளனர். அதன்படி கேசிபி இன்ஜினியர் பிரைவேட் லிமிடெட், கன்ஸ்ட்ரோமால் குட்ஸ், கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்ப்ரா லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்கள், ஆலம் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்துள்ளனர். இதேபோல் எஸ்.பி. கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரான முருகேசன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் அரசு பணி ஒப்பந்ததாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சி.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரான ராஜனும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கி இருக்கிறார். இவர் சந்திரசேகரின் தந்தை. ராஜனுக்கு சொந்தமான சி.ஆர். கட்டுமான நிறுவனம் 2012-13ல் வெறும் 38 லட்ச ரூபாய் தான் வருமானம் ஈட்டியது. ஆனால் அடுத்தடுத்த டெண்டர்களை கைப்பற்றிய இந்த நிறுவனம், 2018 - 19ல் 43 கோடியே 56 லட்சம் வருமானம் ஈட்டியிருக்கிறது. சதவீதத்தின் படி பார்த்தால் 11363 சதவீதம் அதிகம் என்பது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது... மாநகராட்சி ஒப்பந்ததாரரான ராபர்ட் ராஜாவும், கேசிபி நிறுவனமும் சேர்ந்து கோவை மாநகராட்சியில் 14 டெண்டர்களை எடுத்துள்ளது. இந்த கேசிபி நிறுவனத்தில் ராபர்ட் ராஜா பங்குதாரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னை, கோவை மாநகராட்சியில் அப்போது பணியில் இருந்த அதிகாரிகள், இன்றும் பணியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோரும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இவர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா, திண்டுக்கல்லை சேர்ந்த உறவுக்கார பெண் மதுராந்தகி, வேலுமணியின் சகோதரரின் நண்பர் திருமலைசாமி என அனைவரிடமும் விசாரணை நடந்தது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான புகாரை தொடர்ந்து இப்போது எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரை சார்ந்தவர்கள் வீடுகளில் நடந்த இந்த சோதனையும் அரசியல் ரீதியாக பல அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது....