"ஆவினில், 'விசாகா' குழு அமைக்கப்பட்டுள்ளதா?" - பால்வளத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க பால்வளத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பெண் ஒருவர், உயர்அதிகாரியான கிருஷ்ணதாஸ் என்பவர் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அவருடைய விருப்பத்திற்கு இணங்க மறுத்ததால் தனக்கு 4 முறை குற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், கிருஷ்ணதாஸ் மீது விசாகா ஆணையம் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ண ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவினில் பணிபுரியும் பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா குழு அமைக்கபட்டுள்ளதா? என்றும் அவ்வாறு அமைக்க பட்டிருந்தால் அந்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், பால்வளத்துறை இயக்குநர்களுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆவின் பால்வளத் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து நீபதிபதி உத்தரவிட்டார்.