ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நில விவகாரம்: "தற்போது நிலத்துக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது" - உயர் நீதிமன்றம்
ஊட்டி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன நிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1967 ஜனவரி 7-ல் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்காக, தமிழக அரசால், மத்திய அரசுக்கு 333.30 ஏக்கர் நிலம் வென்லாக்டவுன்ஸ் மற்றும் புரூக்காம்ப்டன் ஆகிய காப்புக் காடுகளின் பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் பணிகள் மட்டும் நிறுத்தப்பட்டதை அடுத்து, அந்நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை எடுக்க ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்துஸ்தான் நிறுவனம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்வதோடு, ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில் நடக்கும் அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க வேண்டுமென வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அந்த இடத்தில் ஊட்டி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டபட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். அனைத்து பணிகளுக்கும் தடைவிதிக்க மறுத்த நீதிபதி, ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கான பணிகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என தெரிவித்தார். இறுதி தீர்ப்பு வரும் வரை அந்த நிலத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.