அத்தியாவசிய சேவைகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி - புதிய வசதியை அறிமுகம் செய்தது சென்னை மாநகராட்சி
அத்தியாவசிய சேவைகளுக்கான போக்குவரத்து அனுமதி சீட்டை ஆன்லைன் மூலம் பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள், மற்றும் வாகனங்களுக்கான போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் நேரில் அளிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதைத் தவிர்க்கும் விதமாக, ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டுகளை பெரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், காலை 8 மணி முதல் 11 மணி வரையும் , மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வதற்கு ஜிஎஸ்டி சான்றிதழ், அடையாள அட்டை நகல், வாகன பதிவு சான்றிதழ் நகல், நிறுவன அதிகாரியின் அத்தாட்சி நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.