தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-03-11 11:48 GMT
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பேருந்துகள், மக்கள் அமரும் இருக்கை ஆகியவற்றிற்கு கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியை ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்து பயணிகளுக்கு, கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை, பேருந்து  மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றில் வைரஸ் தடுப்பு மருந்து தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருவாசகம் மணி தலைமையிலான மருத்துவ குழுவினர், இன்று காலை விமானத்தில் வந்திறங்கிய அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்தனர். பின்னர், பயணிகளின் முழு தகவல்களை பெற்று, கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக விமான நிலைய ஊழியர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நகராட்சி துறை சார்பில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையில் பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். கோவில் கதவு, கைப்பிடி, படிக்கட்டு என பல்வேறு இடங்களில் மருந்து தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும், சுகாதாரமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.



Tags:    

மேலும் செய்திகள்