2018 குரூப்-4 தேர்விலும் முறைகேடு செய்ய முயற்சி - இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம்காந்தன் அதிர்ச்சி தகவல்
2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விலும் முறைகேட்டில் ஈடுபட முயற்சி நடைபெற்றது, சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனிடம் நடத்திய விசாரணையில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
2018 குரூப்- 4 தேர்வின்போது, பாதுகாப்புக்கு சென்ற காவலர் அதிக கவனத்துடன் செயல்பட்டதாலும், அவரை விலைக்கு வாங்க இயலாததாலும் இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இதற்காக 40-க்கும் மேற்பட்டோரிடம் 7 முதல் 9 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்ற அவர்கள், முறைகேடு செய்ய இயலாததால் பணத்தை திருப்பி அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையில் இருந்து வெகுதொலைவில் உள்ளதாலேயே, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு முறைகேடு செய்ய முயற்சித்தவர்கள் தான், 2019ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டனரா? என விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.