"செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்"
செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறும் ஒருவர், மனைவியின் பேச்சை கேட்டு மனம் திருந்தி ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், சென்னை போரூரில் கொத்தனாராக தங்கி வேலை பார்த்தார். அப்போது சக கொத்தனாரை தாக்கிய வழக்கில் புழல் சிறையில் இருந்த அவர், விடுதலையாகி பின்னர் சீனிவாசன் என்ற திருடனுடன் நண்பனாக இருந்துள்ளார். இந்த நிலையில் சீனிவாசனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கமலக்கண்ணன் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். செய்யாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதால், தாம் திருடனாகவே மாறிவிடலாம் என எண்ணி, போரூர் பகுதியில் பலே திருடனாக வலம் வந்துள்ளார். கமலக்கண்ணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பத்துக்கும் மேற்பட்ட முறை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது கமலக்கண்ணனுக்கு கலா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. மனைவியின் பேச்சை கேட்டு தற்போது திருந்திவிட்டதாக கூறும் கமலக்கண்ணன், தம் மீதான குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.