சிலை கடத்தல் : பொன்.மாணிக்கவேல் பதில் கடிதம்
சிலை கடத்தல் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள் உள்ளிட்டவைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தமிழக அரசால் தாம் நியமிக்கப்படவில்லை என்றும், உயர் நீதிமன்ற உத்தவுப்படியே தாம் நியமிக்கப்பட்டதாகவும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதன்மை செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக டிஜிபிக்கு அவர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், அரசின் உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ளார்.