அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

அறுபடை வீடுகளில் முதல்படை வீடான, மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது,

Update: 2019-10-28 18:20 GMT
அறுபடை வீடுகளில் முதல்படை வீடான, மதுரை மாவட்டம் திருப்புரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது, இதையடுத்து சண்முகர் வள்ளி தெய்வானைக்கும், உற்சவர் சன்னதியில் உள்ள முருகன் தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், தங்களது விரதத்தை ஆரம்பித்தனர்.

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா - கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் ஆய்வு

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் ஆய்வு செய்தார்.  ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அவர்களது வசதிக்காக தங்கும் விடுதிகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன் ஆய்வு செய்தார். அவருடன் கோவில் செயல் அலுவலர் அம்ரித் உடனிருந்தார்.

காப்புகட்டிய பக்தர்கள் - 7 நாள் சஷ்டி விரதம் தொடக்கம்

பழனி முருகன் கோயிலில், காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று முருகன் வழிபட்டனர். ஏழுநாள் சஷ்டி விரதம் தொடங்கிய பக்தர்கள், பழனி மலைக் கோயில், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. விநாயகர், துவாரபாலகர், நவவீரர்கள், மயில், கொடிமரம் ஆகியவற்றிற்கும் காப்பு கட்டப்பட்டது. இதை ஒட்டி, பழனி கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர்  ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணைஆணையர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள், ஆராதனையில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.

கந்த சஷ்டி விழா தொடக்கம் - ஏராளமான பக்தர்கள் முருக தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி  மலை மீது உள்ள முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா கோலகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பல்வேறு அலங்காரங்களில் முருகன் காட்சி அளிக்க உள்ளார். இதன் ஒருபகுதியாக  அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதை ஒட்டி, கோயில் தக்கார் ஜெய்சங்கர் இணை ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் முதல்நாள் நிகழ்ச்சியில் துவங்கி வைத்தனர்.

பழமுதிர்சோலை கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

மதுரை மேலூர் அடுத்த அழகர்கோயில் மலையில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில், மேளதாளம் முழங்க காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்தசஷ்டி விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் வாகனத்தில் வந்து முருகப் பெருமான் அருள்பாலிக்க உள்ளார். சூரசம்ஹாரம் முடித்த பிறகு முருகப் பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறும். இதை ஒட்டி, விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், பங்கேற்று காப்புக் கட்டி வேண்டிக்கொண்டனர்.
 

மருதமலை சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 

கோவையில் புகழ்பெற்ற, அறுபடை வீடுகளில் ஏழாவது படை வீடான மருதமலை சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது,இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, இதனையடுத்து ஆட்டுக்கிடா வாகனத்தில், சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். அதன் பின் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர்.

சிவன்மலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில் ஏராமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு அணிந்து கொண்டனர். காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலையில் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. இந்நிகழ்சிகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது. இதில் மலை அடிவாரத்தில் இருந்து நஞ்சுண்டேஸ்வரர் மலைக்கு எழுந்தருளினார். இதில் இன்று சுப்பிரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. 

16 வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை - "ஓம் முருகா" கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில், நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஜெயந்தி நாதருக்கு சந்தனம், பன்னீர், புஷ்பம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் மண்டபத்தில், பால், மஞ்சள், இளநீர், தேன் போன்ற பதினோரு வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த, அபிஷேக ஆராதனையில் பங்கேற்ற பக்தர்கள் 'ஓம் முருகா' கோஷமிட்டு முருகப் பெருமானை வழிபட்டனர். சிறப்பான ஏற்பாடுகளும் நாள்தோறும் அங்கு சிறப்பு ஆராதனை, அபிஷேக வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 







Tags:    

மேலும் செய்திகள்