நசுங்கி வரும் பழமையான திண்டுக்கல் பூட்டு தொழில் : அடையாளத்தை இழந்த திண்டுக்கல் 'பூட்டு'
பணம், நகை, மட்டுமல்ல மனிதனுக்கும், கடவுளுக்குமே பாதுகாப்பு தருவது பூட்டுதான்.
பணம், நகை, மட்டுமல்ல மனிதனுக்கும், கடவுளுக்குமே பாதுகாப்பு தருவது பூட்டுதான்.பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது திண்டுக்கல் பூட்டு. 1930ல் தனியொரு நபரால் தொடங்கப்பட்ட இந்த பூட்டுத் தொழில், நாளடைவில், மிகப் பிரபலமாகி பெரும் தொழிற்சாலையாக மாறியதாக கூறப்படுகிறது. பல்வேறு ரக பூட்டுகளை தயாரித்த நிலையில், பலே திருடர்களும் உடைக்க முடியாத வலிமையான பூட்டு என்பதால், திண்டுக்கல் பூட்டு, உலக அளவில் பிரசித்தம். லிவர் பூட்டு, கொத்துப் பூட்டு, மாங்கா பூட்டு, நான்கு சாவி உள்ள பார்ட்னர்ஷிப் பூட்டு, ஒரு சாவியால் பூட்டிய பிறகு, மற்றொரு சாவியைக் கொண்டு திறந்து பூட்டினால், மீண்டும் பழைய சாவி மூலம் திறக்க முடியாத மாஸ்டர் கீ பூட்டு, வேறு சாவியை பயன்படுத்தினால், வெளியே எடுக்க முடியாதவாறு பிடித்துக் கொள்ளும், சாவி பிடிக்கும் பூட்டு, பெல் பூட்டு, டபுள் லாக், கோயில் பூட்டு என 24 வகையான பூட்டுகளை உருவாக்கி பிரம்மிக்க வைக்கின்றனர் உற்பத்தியாளர்கள்...
பூட்டு தொழில் உச்சத்தில் இருந்தபோது, பூட்டுத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கிய அன்றைய அரசு, அரசாங்க அலுவலகங்களுக்கு இங்கு மட்டுமே பூட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவையும் பிறப்பித்தது. வளரும் நாகரீகத்தில், உத்தரப்பிரதேசம் மாநிலம அலிகாரில் இருந்து இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் இந்தியா முழுவதும் படையெடுத்தன. அதில், பறிபோன திண்டுக்கல் பூட்டு உற்பத்தி, மெல்ல நசுங்கிப் போனது. உற்பத்தி குறைந்ததால், பூட்டு இல்லா வீடாக, தொழிலாளர் வாழ்வாதாரம் களவு போனது பெரும் சோகம். முதியவர்கள் மட்டுமே பணியாற்றும் பூட்டு பட்டறையில், அடுத்த தலைமுறைக்கு தொழில் நுட்பங்களை கற்க ஆளில்லை. விருப்பமும் இல்லை. உடனடியாக, பூட்டு பயிற்சிக்கு, தனி பயிற்சி மையம் அமைக்கவும், மானிய விலையில் மூலப் பொருட்களை வழங்கி, தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. பாதுகாப்பற்று நலிவடைந்து வரும் அடையாளமிக்க திண்டுக்கல் பூட்டு தொழிலை மீட்க வேண்டும் என்பது ஏகோபித்த மக்களின் கருத்து...