"விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும்" - சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 11 ஆயிரம் மின் இணைப்புகள் தட்கல் மூலம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-02 07:36 GMT
சட்டப்பேரவையில் இன்று  பேசிய திமுக  எம்.எல்.ஏ. ராஜா, தனது தாம்பரம் தொகுதிக்குட்பட்ட கணபதிபுரம், அசோக்நகர் பகுதிகளில் மின்மாற்றிகள் அமைக்கப்படுமா? என  கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, தாம்பரம் பகுதியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மின்மாற்றிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மாற்று இடங்கள் தேடப்பட்டு வருவதாகவும்  கூறினார். சட்டமன்ற உறுப்பினர் ராஜா இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனடியாக மின்மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

பின்னர் பேசிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விவசாயிகளுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதா? என்று துணை கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, கடந்த 2 ஆண்டுகளில் 19 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு 11 ஆயிரம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு தட்கல் முறையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்