உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளி : ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைக்கு வர்ணம்
தர்மபுரியில் பள்ளி இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வைக்கும் முயற்சியாக பள்ளி கட்டிடத்துக்கு ரயில் பெட்டி வடிவில் வர்ணம் தீட்டியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இடை நின்ற மாணவ மாணவிகள் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியை தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழி நடத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் இணைக்கவும், புதிய மாணவர்களை சேர்க்கும் நோக்கத்தில் புது முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பள்ளி துவங்குவதற்கு முன்பு பள்ளியை சுத்தம் செய்து பள்ளி கட்டிடடத்துக்கு ரயில் பெட்டி வடிவில் வர்ணம் தீட்டி அழகுப்படுத்தியுள்ளனர். மேலும் பல்வேறு விழிப்புணர்வு படங்களையும் பள்ளி வளாகத்தில் வரைந்துள்ளனர். இது தற்போது அப்பகுதி மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த முயற்சி நிச்சயம் மாணவர்களை பள்ளியை நோக்கி வரவைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.