கர்நாடக சிங்கம் என பெயர் பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி : தமிழக அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல்
ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த பெங்களூரு நகர துணை ஆணையர் அண்ணாமலை, தமிழக அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல்துறை ஆணையராக இருந்த அண்ணாமலை, ஐ.பி.எஸ் அதிகாரியும் ஆவார். பல வழக்குகளை திறமையாக கையாண்ட அண்ணாமலை, ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுத்தார். இவர், தற்போது தமது பணியை ராஜினாமா செய்துள்ளார். பணிச்சுமை காரணமாக பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ள அண்ணாமலை, அடுத்து அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, சாதனையாளர்கள், இளைஞர்கள் அரசியலில் நுழைவது மகிழ்ச்சியூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், அரசியல் ஈடுபடுவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை குப்புசாமி. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த அண்ணாமலை எம்.பி.ஏ. படிப்பை முடித்து, ஐ.பி.எஸ் பதவிக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.