"பால் சொசைட்டி விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை" : வங்கி முற்றுகை - மேலாளருக்கு கண்டனம்
திருப்பூரில் அரசு பால் சொசைட்டியில் பால் ஊற்றிய விவசாய உறுப்பினர்களுக்கு, பணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு ஆவின் பால் சொசைட்டி உள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த 90 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த மாதம் சொசைட்டியில் பால் ஊற்றிய 90 உறுப்பினர்களுக்கான தொகை ஆவின் நிறுவனம் சார்பில் கள்ளிப்பாளையம் வங்கிக் கிளைக்கு அனுப்பிய நிலையில், வாடிக்கையாளர்களான விவசாயிகளின் கணக்கிற்கு பணம் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து வங்கி கிளை மேலாளரிடம் பலமுறை கேட்டபோது, முறையான பதில் கூறாமல் மெத்தனப் போகுடன் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி மொழிக் கடிதத்தை மேலாளர் வழங்கியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.