நீர் நிலைகளில் குறைந்து வரும் தண்ணீர் : உணவு, தண்ணீர் கிடைக்காமல் வெளிநாட்டு பறவைகள் தவிப்பு
ஒசூர் பகுதியிலுள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் தண்ணீர், உணவு தேடி தவித்து வருகின்றன.
ஒசூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஆண்டு தோறும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கி, இனவிருத்தி செய்து மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு செல்லும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஒசூர் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்து வந்ததால் பறவையினங்களின் வரத்து குறைந்தது.
இந்த ஆண்டும் ஒசூர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் தண்ணீர், உணவு தேடி வரும் பறவையினங்கள் ஏமாற்றமடைந்து, தவித்து வருகின்றன. இந்நிலையில் இராமநாயக்கன் ஏரி மற்றும் சந்திராம்பிகை ஏரி ஆகிய 2 ஏரிகளில் மட்டும் ஓரளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளதால், தினந்தோறும் பறவை கூட்டங்கள் இங்கு படையெடுத்து வருகின்றன.