அரசு கட்டிடங்கள் கட்ட சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை : ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் அருகே பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக வருவாய் துறை பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்ய கோரி, சேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Update: 2019-05-01 18:53 GMT
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், குறிப்பிட்ட இந்த நிலம், சதுப்பு நிலம் அல்ல என ஏற்கனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளதாகவும் இந்த வழக்கை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்றும் வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சுட்டி காட்டி, சதுப்பு நிலங்களை ஒதுக்கி தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஏற்கனவே கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீர் சேமிப்பு பகுதிகளை பாதுகாக்காவிட்டால், தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் தொலைவில் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். வேலியே பயிரை மேய்ந்தது போல விவசாய நிலங்களில் வான் உயரத்திற்கு கட்டிடங்களை அரசே கட்டினால், விவசாயிகள் எங்கு விவசாயம் செய்வர் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்