மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் : இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு - வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்
மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியின்றி சங்கம் துவக்கிய காரணத்திற்காக 8 நிரந்தர பணியாளர்களை திடீர் பணிநீக்கம் செய்து ஏப்ரல் 29 தேதி மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 29 மாலை முதல் காலவரையற்ற போராட்டத்தை மெட்ரோ பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.மொத்த நிரந்தர பணியாளர்கள் 240 பேரும் கூட்டாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், மெட்ரோ ரயில்கள் சரிவர இயங்கவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ பணியாளர் சங்கம், மெட்ரோ நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையம் ஆகியவை இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பணியாளர் சங்கம் வைத்த கோரிக்கைகள் எதையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.