ரூ.11 கோடி மதிப்பிலான தங்க நகை மற்றும் பணம் கொள்ளை : அரசு அதிகாரி என கூறி மதுரை தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தொழிலதிபரிடம் அரசு அதிகாரிகள் என கூறி 11 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் தயாநிதிக்கு மதுரை, சென்னை உள்பட பல இடங்களில் நகை கடைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளன. நேற்றிரவு மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் பதினொரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அதிகாலை 2 மணியளவில் பரனூர் சுங்கச் சாவடி வந்துள்ளார். அப்போது அவரது காரை வழிமறித்து சிலர், தங்களை அரசு அதிகாரிகள் என கூறி அடையாள அட்டையை காண்பித்து சோதனை செய்யவேண்டும் என கூறியுள்ளனர். இதை நம்பிய தொழிலதிபர் தயாநிதி காரை சோதனை செய்ய அனுமதித்துள்ளார். அப்போது காரில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்ட அவர்கள், காவல் நிலையத்திற்கு தயாநிதியை வரச் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்த போது ஒரு கட்டத்தில், அவர்கள் வந்த காரை காணவில்லை என கூறப்படுகிறது. செங்கல்பட்டு காவல் நிலையம் வந்த தயாநிதி , நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்துள்ளார், அப்போது தான் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த தயாநிதி புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில், சுங்கச் சாவடி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம கும்பலுக்கு வலைவீசியுள்ள அதேநேரத்தில், உண்மையாகவே காரிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.