வாக்கு மையத்தில் தாசில்தார் அத்துமீறி நுழைந்த விவகாரம் : மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம்
மதுரை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
* மதுரை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் பெண் தாசில்தார் அத்துமீறி நுழைந்ததாக புகார் எழுந்தது
* இந்த விவகாரம் குறித்து உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
* இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
* அப்போது, மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சித்தலைவரின் உதவியாளர் அறிவுறுத்தலின் அடிப்படையில் பெண் தாசில்தார் வாக்கு மையத்தில் நுழைந்ததாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய விசாரணையில் தெரியவந்தது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
* வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
* வட்டாட்சியர் சம்பூர்ணம் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
* மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவரின் உதவியாளர் ஆகிய இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை நியமித்துள்ளது.
* மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அதிகாரி குருசந்திரனை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம், சாந்தக்குமாரை நியமனம் செய்துள்ளது. இந்த தகவல் தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
* இதைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன், குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையர் மோகன்தாஸ் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.