திமுக நிர்வாகிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
திருச்செந்தூர் அருகே திமுக நிர்வாகிகளின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோவின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இவர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியில் உள்ள இவரது சகோதரர், தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் ஆனந்த் ரொட்ரிகோ வீட்டிலும் வருமானத்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சோதனைகளில், பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சோதனை குறித்து அறிந்து, ஏராளமான தி.மு.க.வினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, மார்ச் 29ஆம் மற்றும் கடந்த ஒன்றாம் தேதிகளில், எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் பண்ணை வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தியதை தொடர்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டது.