ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.24 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு தனியார் பீடி கம்பெனி வேனை அவர்கள் சோதனையிட்டனர்.அதில் உரிய ஆவணமின்றி 7 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது.இதனையடுத்து,பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வேன் ஓட்டுநர் அக்ணிராஜ் என்பவரிடம் இது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பால் வாகனத்தில் இருந்து ரூ.1.06 லட்சம் பறிமுதல்
மணப்பாறையில் தனியார் பால் நிறுவன வாகனத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த,வேடசந்தூர் தனியார் பால் நிறுவன வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.சென்னை தாம்பரம் பகுதியில் பால் விற்பனை செய்த பணத்துடன் திரும்பி வந்த போது அதிகாரிகள் பறிமுதல் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.இந்த நிலையில், மணப்பாறையில் கடந்த 2 நாட்களில் 4 முறை பணம் பிடிபட்டுள்ளது. அதில் ஒரே அதிகாரி 3 முறை பணம் பறிமுதல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.