7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்...
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பட்ராத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தலால். தனது மனைவி பிரிந்து சென்றதை அடுத்து வீட்டைவிட்டு வெளியேறியவர், மனநலம் பாதிக்கப்பட்டு சென்னைக்கு வந்தடைந்துள்ளார். மாங்காடு அடுத்துள்ள கெளபாக்கத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் நந்தலாலை மீட்டு கடந்த 5 ஆண்டுகளாக பராமரித்து வந்துள்ளனர். மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹிரா, அங்கு சென்றிருந்த போது நந்தலாலிடம் பேச்சு கொடுத்து அவரது விவரங்களை முடிந்த வரை பெற்றுள்ளார். இதனையடுத்து ஜார்கண்ட் மாநில போலீசாரிடம் பேசி நந்தலால் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து சென்னை வரவழைத்துள்ளார். குடும்பத்தாரை நந்தலால் அடையாளம் கண்டுக்கொண்டதை அடுத்து அவரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளனர். குடும்பத்தை பிரிந்து வாடிய மனநலம் பாதிக்கப்பட்டவரை மீண்டும் குடும்பத்துடன் சேர்த்து வைக்க மாநில குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் தாஹிரா மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுகளை பெற்று வருகிறது.