சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா - வேண்டுதலை நிறைவேற்றி பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழாவை ஒட்டி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்த பக்ய்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
துணை முதலமைச்சர் சாமி தரிசனம் :
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், குடும்பத்தினருடன் பழனியாண்டவரை தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் துணை முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, துணை முதலமைச்சர் குடும்பத்தினர் ரோப் கார் மூலம் மலை அடிவாரத்தில் இருந்து, கோயிலுக்கு சென்றனர்.
பழனிக்கு காவடி எடுத்த முருக பக்தர் :
பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேடசந்தூரை சேர்ந்த முருகபக்தர் செல்வகணேஷ் உடல் முழுக்க 1008 அலகு குத்தி பறவைக்காவடியாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இடும்பன் கோயிலில் இருந்து உடலில் அலகு குத்தி பறவைக்காவடியாக கிரிவீதி சுற்றி வந்தார்.
சுவாமிமலையில் தைப்பூச திருவிழா உற்சாகம் :
நான்காம் படை வீடான கும்பகோணம் சுவாமிமலையில், அதிகாலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலையில் கோயிலில் திரண்ட பக்தர்கள், மூலவரை தரிசனம் செய்தனர். அங்கு வெள்ளி மயில் வாகனத்தில் முருகனின் வீதிஉலா நடைபெறுகிறது. நண்பகலில், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது.
வடபழனி கோயிலில் தைப்பூச வழிபாடு :
சென்னை வடபழனி முருகன்கோயிலில் நடந்த தைப்பூச சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. சில பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வடலூர் சத்யஞான சபையில் ஜோதி தரிசனம் :
தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்யஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபையில் 148-வது தை பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடந்தது. 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட இந்த தரிசனத்தில், தொழில்துறை அமைச்சர் சம்பத், உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தைப் பூச திருவிழாவையொட்டி வடலூர் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது.