சென்னை முழுவதும் 1.50 லட்சம் சிசிடிவி கேமரா : 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
சென்னையில் காவல்துறையினர் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, சென்னை மாநகரம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருப்பது சிசிடிவி கேமராக்கள் தான்...
சுமார் ஒரு கோடி பேர் வசிக்க கூடிய சென்னையில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து காவல் துறைக்கு பெரிய தலைவலியை உண்டாக்கி வந்தன. குறிப்பாக இரவு நேரத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு சவாலாகவே இருந்து வந்தது .
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை , ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களான சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் எழும்பூர் இரயில் நிலையம் , கோயம்பேடு பேருந்து நிலையம், மெரினா கடற்கரை போன்ற பகுதிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர் சென்னை காவல்துறையினர்.
குறிப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் இரவில் வண்ண விளக்குகளால் ஒளிவருவதால் குற்றசம்பவங்களில் ஈடுபடுபவர்களிடையே ஒரு பயத்தை உண்டாக்குகிறது