குட்கா வழக்கு : 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று பிற்பகல் விசாரணைக்கு வந்த போது, கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது 5 பேர் கைது செய்யப்பட்டதும், சிறையில் அடைக்கப்பட்டதும் சட்டவிரோதமானது எனக் கூறியதுடன், அவர்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என வாதிட்டனர். கைதானவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிபிஐ மனு தாக்கல் செய்ததாகவும் வாதிடப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் தான் குட்கா ஊழலில் தொடர்புடைய செல்வாக்கான நபர்களின் விபரம் தெரியவரும் என்றும், இவர்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தெரியவரும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திருநீலபிரசாத், கைதான 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் இவர்கள் 5 பேரையும் வரும் வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.