யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது ஸ்பெயின் அணி. அதே சமயம், விட்டுக்கொடுக்காமல் இங்கிலாந்து அணி விளையாடியதால் பரபரப்புடன் போட்டி நகர்ந்தது. 47வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்ய, 73வது நிமிடத்தில் கோல் அடித்து இங்கிலாந்து சமன் செய்தது. இருப்பினும், 86வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயின் அணி சார்பில் கோல் பதிவான நிலையில், 2க்கு ஒன்று என்ற கணக்கில் அந்த அணி வெற்றி வாகை சூடியது. யூரோ கோப்பையை நான்காவது முறையாக ஸ்பெயின் அணி வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.