பெங்களூரு டெஸ்ட் - 46 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

Update: 2024-10-18 12:36 GMT

பொதுவாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தை பேட்டர்களின் சொர்க்கபுரி என்பார்கள்... ஆனால் மழை மேகங்கள் சூழ்ந்த வானிலை, மைதானத்தின் தன்மையை முற்றிலும் மாற்றியது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அதிர்ச்சி அளித்தது ஆடுகளம்...

ஆம்... ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே சவுதியின் ஸ்விங்கில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார் கேப்டன் ரோகித்...


பந்தில் சிறப்பான movement கிடைக்க ஆடுகளத்தின் தன்மையை கச்சிதமாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். விளைவு சீட்டுக்கட்டுபோல் இந்திய விக்கெட்கள் சரிந்தன.

பெங்களூருவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த இளம் வீரர் சர்ஃப்ராஸ் கானும் பூஜ்ஜியத்தில் நடையைக் கட்டினார்.


மேட் ஹென்ரியும் வில்லியம் ஓரோர்க்கும் லைன் அன்ட் லென்த்தில் துல்லியமாக வீசி நெருக்கடி கொடுக்க, மற்ற நியூசிலாந்து வீரர்கள் ஃபீல்டிங்கில் கலக்கினர்.

லெக் ஸ்டம்ப்பிற்கு வெளியே சென்ற பந்தை தேவையின்றி தொட்ட உள்ளூர் வீரர் கே.எல். ராகுலும் டக்-அவுட் ஆனார். ஜடேஜாவும் அஸ்வினும் அவரைப் பின் தொடர, டக்-அவுட்டான இந்திய பேட்டர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்தது. ஆட்டம் கண்டது இந்தியா....

காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களின் கடைசி நம்பிக்கையை தகர்த்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகளையும் வில்லியம் ஓரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, 32வது ஓவரில் வெறும் 46 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா...

சொந்த மண்ணில் 50 ரன்களைக் கூட கடக்க முடியாமல் இந்தியா அவச்சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டெல்லியில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே சொந்த மண்ணில் இந்தியாவின் மோசமான சாதனையாக இருந்தது.

முதல் இன்னிங்ஸில் மாபெரும் சரிவை சந்தித்த இந்தியா, பெங்களூரு டெஸ்ட்டில் மீட்சி காணுமா?... பொறுத்திருந்து பார்ப்போம்.......

Tags:    

மேலும் செய்திகள்