டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டி: அரையிறுதியில் இந்தியா தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் இந்தியா மோதியது. அப்போது, ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணி கோல் அடித்து தங்களை முன்னிலைப்படுத்தியது. தொடர்ந்து ஆட்டத்தின் 7 மற்றும் 8-வது நிமிடத்தில், இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர். 19-வது நிமிடத்தில் பெல்ஜியம் மேலும் ஒரு கோல் அடித்ததால், முதல் பாதியில் இரு அணிகளும் 2 கோல்களுடன் சமநிலை வகித்தன. தொடர்ந்து நடந்த 2-வது பாதியில் பெல்ஜியம் வீரர்கள், பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, 3 கோல் அடித்த நிலையில், இந்திய வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் தடுமாறினர். இதனால், ஆட்ட நேர முடிவில் 5-க்கு 2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த இந்தியா வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது ஜெர்மனியுடன் விளையாட உள்ளது.