அதிரடியாக அரசியலில் குதித்து அதிர வைத்த விஜய்..."2026 சட்டமன்றத் தேர்தல் தான் ஒரே இலக்கு..."

Update: 2024-07-04 14:54 GMT

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய்...திரைப்படங்களில் அரசியல் வசனங்கள் பேசுவதோடு நின்று விடாமல் அதிரடியாக அரசியலில் குதித்து அதிர வைத்தார்...

"விஜய் மக்கள் இயக்கம்"என்ற ரசிகர் மன்றம், "தமிழக வெற்றிக்கழகம்"என்ற அரசியல் இயக்கமாக மாறிய நிலையில் விஜய் ரசிகர் படை, "தொண்டர்களான" மகிழ்ச்சியில் திளைத்தனர்...

அரசியல் கட்சி துவங்கும் முன்பே விஜய் மக்கள் இயக்கம் மூலம் அவரது ரசிகர்கள், அன்னதானம், ரத்த தானம், மருத்துவ முகாம், இரவு பாடசாலை, பொதுநூலகம், வெள்ள நிவாரணம் என பல நற்பணிகளை செய்து வந்தனர்...

சினிமாவுக்கு முழுக்கு போடுவதாய் விஜய் அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் பேரிடியாய் இறங்கிய போதும், 2026 சட்டமன்றத் தேர்தல் தான் ஒரே இலக்கு என தமிழக வெற்றிக்கழக தலைவராக விஜய் வெளியிட்ட அறிவிப்பு புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆறுதலாய் அமைந்தது...

கட்சி துவங்கி முதல் விழாவாக கல்வி விருது விழாவை அறிவித்தது தமிழக வெற்றிக்கழகம்...10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார் விஜய்...

2017ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பால் மக்கள் திண்டாடிய வேளையில், மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற விஜய்...அதே சமயம் சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாமோ என மிகத் தாழ்மையாய் தனது அரசியல் பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்...

2016ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போது ஒட்டுமொத்த தமிழகமே தன்னெழுச்சியோடு களத்தில் நிற்க, விஜய் வித்தியாசமான தனது ஆதரவைத் தெரிவித்தார்...


"இதற்கு சம்பந்தமானவங்கள வெளிய அனுப்'பீட்டா'" சந்தோஷப்படுவேன்"

குடியுரிமை திருத்தச் சட்டம்...தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு...மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என அடுத்தடுத்து சமூக பிரச்சினைகளுக்கு ஒரு நடிகராகக் குரல் கொடுத்து வந்தார் விஜய்...

இந்த சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சித் தலைவராக அரசியலில் அதிரடி காட்டி வருகிறார்...

கள்ளக்குறிச்சியில் பல உயிர்களைக் குடித்த விஷச்சாராயத்தால் தமிழகமே கலங்கிப் போயிருந்த சூழலில்...இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய்...இது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது பரபரப்பானது...

கடந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கல்வி விருது விழா நடத்தப்பட்ட நிலையில் அப்போது பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற சிறந்த தலைவர்களை படியுங்கள் என மாணவர்களுக்கு ஒரு நடிகராக அரசியல் பாடமெடுத்தார் விஜய்...

ஆனால் இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவராக மேடையேறிய விஜய், "தமிழகத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை..." என்று பரபரப்பை ஏற்படுத்தியதுடன், "மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாவது... ஒரு பெற்றோர் - அரசியல் இயக்கத் தலைவர் என்ற முறையில் தனக்கு அச்சமாக உள்ளது என அறிவுரை வழங்கினார்...


மாநில கட்சிகளை சீண்டுவதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய கட்சிக்கு ஆதரவாக விஜய் செயல்படுவதாக பேச்சுகளும் எழுந்தன...

ஆனால், 2ம் கட்ட கல்வி விருது விழாவில் நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்து தான் எந்தப்பக்கமும் சாயவில்லை என்பதை நிரூபித்துள்ளார்...

அதிலும், சட்டமன்றத்தில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை விஜய் மனப்பூர்வமாக வரவேற்றது கவனத்தைப் பெற்றது...


விஜய்யின் நீட் பேச்சை, பாஜக தவிர பல அரசியல் கட்சியினரும் வரவேற்றுள்ளனர்...

அரசியலில் களமிறங்கிய விஜய்க்கு கல்வி விருது விழா மேடையிலேயே பல பெற்றோர்களும், இளம் தலைமுறை வாக்காளர்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியது விஜய்யை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது...

கட்சித் தொண்டர்கள் கட்சியைக் கட்டமைக்கும் பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்...

2026 தான் இலக்கு என கோட்டையைப் பிடிக்கும் கனவோடு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, சங்கம் வளர்த்த மதுரை மண்ணில் மிகக் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விஜய் முன்னெடுக்கப் போவது இடதுசாரியா?...வலது சாரியா?...அல்லது 2ம் இல்லாத மய்ய அரசியலா? என்பது விரைவில் தெரிந்து விடும்...

Tags:    

மேலும் செய்திகள்